ECONOMY

தடுப்பூசித் திட்டத்தில் 90 விழுக்கட்டு முன்களப் பணியாளர்கள் பங்கேற்பு- சுல்தான் மகிழ்ச்சி

ஷா ஆலம், மார்ச் 19- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனைகளைச் சேர்ந்த 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட முன்களப் பணியளர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள், தாதியர், அம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவ துறை சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் இந்த தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அறிக்கை ஒன்றில் கூறினார்.

தனியார் மருத்துவமனைகளில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த தடுப்பூசியை பெற்றுள்ளதாக அறிகிறேன். இந்த செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முன்களப் பணியாளர்கள் இனி மன அழுத்தமின்றி நிதானமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் பணியை ஆற்றுவர் என நம்புகிறேன் என்றார் அவர்.

கோவிட்-19 நிலவரங்கள் குறித்து மாநில சுகாதார இயக்குநர் டத்தோ இண்ட்ரா டாக்டர் சஹாரி ஙகாடிமானிடமிருந்து தாம் தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் பொறுப்புகளை பொறுப்புடன் நிறைவேற்றி வரும் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Pengarang :