SELANGOR

15வது பொதுத்தேர்தல்- சிலாங்கூரில் தொகுதி பங்கீடு விரைவில் முழுமை பெறும்

ஷா ஆலம், ஏப் 8- நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கான சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தொகுதி பங்கீடு இம்மாத மத்திய பகுதிக்குள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலின் போது பெர்சத்து கட்சி போட்டியிட்ட இடங்களை மையமாக கொண்டு ஜசெக மற்றும் அமானா கட்சிகளுடன் பேச்ச நடத்தப்படுவதாக  மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தொகுதி பங்கீட்டுக்கு விரைவில் தீர்வு காண விரும்புகிறோம். இறைவன் அருளால் வரும்  ரமலான் மாதத்தின் முதல் வாரத்தில் இவ்விவாகரம் சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

அதிக இடங்களைத் தற்காத்துக் கொள்வதன் வழி மாநிலம் தொடர்ந்து கெஅடிலான் கட்சியின் வசம் இருப்பது உறுதி செய்யப்படும் என மாநில மந்திரி புசாருமான அவர் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 13இல் கெஅடிலான் கட்சியின் முதன்மை தேர்தல் நடவடிக்கை அறையைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவத்தார்.

மாநிலத்தை வழி நடத்துவதில் பிரதான கட்சியாக விளங்கும் கெஅடிலான் கட்சியின் ஆற்றலை மதிப்பிடுவதில் மக்கள் விவேகத்துடன் செயல்படுவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி பலத்தையும் மக்களின் ஆதரவையும் இழந்து விட்டது. அதனால் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கூட அது அஞ்சுகிறது என்றார் அவர்.


Pengarang :