MEDIA STATEMENTNATIONAL

அவசரகாலத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாடாளுமன்றத்தைக் கூட்டுவீர்- பக்கத்தான் வலியுறுத்து

ஷா ஆலம், ஏப் 9- நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளைக் களைவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும்படி பிரதமரை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியள்ளது.

நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் அவசர காலத்தை அகற்றும்படி மாமன்னருக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அந்த நம்பிக்கை கூட்டணி கேட்டுக் கொண்டது.

நாட்டு மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் கோவிட்-19 பெருந்தொற்று மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண்பதில் பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்று அது கூறியது.

மிகவும் இழிவான அரசியல் துரோகம் மற்றும் கீழறுப்புச் செயல்களால் நாட்டில் ஜனநாயகம் பெரும் பேரிடரை எதிர்நோக்கியுள்ளது. இதனால் ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது எனவும் அக்கூட்டணி கவலை தெரிவித்தது.

போர்ட்டிக்கசனில் நேற்று தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெற்ற பக்கத்தான் ஹராப்பான் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் இந்த கருத்தை வெளியிட்டனர்.

கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண், பினாங்கு முதலமைச்சர் சௌ கூன் யோ ஆகியோரும் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தனர்.

வரும் 15வது பொதுர் தேர்தலுக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமை தேர்ந்தெடுத்த அக்கூட்டணி, பிரதமர் வேட்பாளராகவும் அவரை முன்மொழிந்துள்ளது.

 


Pengarang :