PENDIDIKANSELANGORYB ACTIVITIES

கல்வியில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு- செந்தோசா தொகுதி ஏற்பாடு

கிள்ளான், ஏப் 18- கல்வி கற்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி மூன்று மாத காலத்திற்கு இலவச வகுப்பை நடத்தவுள்ளது.

‘சினார் இல்மு ஹராப்பான் செந்தோசா‘ என்ற அந்த திட்டம் மூலம் மாணவர்கள்  3எம் எனப்படும் வாசிப்பு, எழுத்து மற்றும் எண்களை குறைந்த பட்சம்  அடையாளம் காண்பது உறுதி செய்யப்படும் என்று தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்தக் கட்டமாக இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நிலையில் உள்ளதால் இம்மாணவர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் வழங்குவது அவசியமாகும் என்றார் அவர்.

மாணவர்களுக்கு அடிப்படையில் தேவைப்படக்கூடிய வாசிப்பு, எழுத்து மற்றும் எண்கள் தெரியாத மாணவர்கள் இன்னும் நம்மிடையே இருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

இந்த மூன்று அடிப்படை கூறுகளையும் அறிந்து கொண்டால் அவர்கள் எதிர்காலத்தில் வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த விளங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் டைலக்சியா சங்கத்தின் உதவியுடன் இத்திட்டத்திற்கு தேவையான 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

தொடக்கத்தில் 100 மாணவர்கள் இத்திட்டத்திற்கு பதிவு செய்திருந்தனர். எனினும், அவர்களில் அனைவரும் கல்வி பிரச்னையை எதிர்நோக்கவில்லை. அவர்களில் 30 மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று மாத  காலத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த இலவச வகுப்பு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

 


Pengarang :