ECONOMYNATIONAL

எல்.ஆர்.டி. விபத்து- கிளானா ஜெயா தடத்தில் இரயில் சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.

கோலாலம்பூர், மே 25– கிளானா ஜெயா தடத்தில் எல்.ஆர்.டி. இலகு ரயில் சேவை இன்று அதிகாலை 6.00 மணி முதல் வழக்க நிலைக்கு திரும்பியது.

அந்த பகுதியில் ஒற்றைத் தடத்தில் மட்டும் ரயில் சேவை மேற்கொள்ளப்படும் வேளையில் பயணிகளின் வசதிக்காக பிராசாரானா நிறுவனத்தின் பஸ்கள் இலவச சேவையை வழங்கி வருகின்றன. 

பரபரப்புமிக்க வேளைகளில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் மற்ற நேரங்களில் முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறையும் சேவை வழங்கப்படுவதாக பிராசாரானா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக ஐம்பது விழுக்காட்டு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அது மேலும் கூறியது.

பயணிகள் வழக்கத்தைக் காட்டிலும் சற்று அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும். எனினும், நடப்பு தேவையை கருத்தில் கொண்டு சேவை அதிகரிப்பதற்குரிய சாத்தியம் உள்ளது என்று அது தெரிவித்தது.

பரபரப்புமிக்க நேரங்களில் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு 15 முதல் 20 நிமிட இடைவெளியில் ஐந்து இரட்டை மாடி பஸ்கள் பாசார் செனி மற்றும் அம்பாங் பார்க் எல்.ஆர்.டி. இடையே இலவச சேவையை மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :