HEALTHMEDIA STATEMENTNATIONAL

சூடு பிடிக்கிறது தடுப்பூசி திட்டம்- நேற்று 197,963 பேர் தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், ஜூன் 15– நேற்று நாடு முழுவதும் 197,963 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர். ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர் தடுப்பூசி பெற்றது இதுவே முதன் முறையாகும். நாளொன்றுக்கு 200,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை விரைவில் அடைய முடியும் என்ற நம்பிக்கையை இந்த எண்ணிக்கை ஏற்படுத்தியுள்ளது.

 நேற்று 142,890 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 55,073 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

இதன் வழி கோவிட்-19 முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 88 ஆயிரத்து 233 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 13 ஆயிரத்து 039 பேராகும் என தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் 180,605 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் சரவா (135,621). ஜொகூர் (135,435), கோலாலம்பூர் (127,274) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.

நேற்று வரை 1 கோடியே 38 லட்சத்து 11 ஆயிரத்து 642 பேர் தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், சிலாங்கூர், ஜொகூர், சரவா, கோலாலம்பூர் ஆகிய மாநிலங்கள் இப்பட்டியலில் முன்னிலை வகிப்பதாகச் சொன்னார்.


Pengarang :