ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதில் ஆதிக்கமா?- கைரியின் குற்றச்சாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு

ஷா ஆலம், ஜூன் 23– கோவிட்-19 தடுப்பூசியை விநியோகிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதிக்கம் செலுத்துவதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது  என கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பரிவுடன் நடந்து கொண்டதை இதுவரை நடந்த சம்பவங்கள் நிரூபிப்பதால் கைரியின் குற்றச்சாட்டை தாங்கள் வன்மையாக மறுப்பதாக மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் மிஷல் ரோக்கஸ் கூறினார்.

மலேசியாவுக்கான தடுப்பூசி விநியோகம் தொடர்பில் நாடு செய்து கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றிய செயலகம் எந்த பிரச்னையுமின்றி அங்கீகரித்தது  என்பதை உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என்றார் அவர்.

அனைத்துலக சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று தலைநகரில் நடைபெற்ற “ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய கோவிட்-19 உடனடி ஆதரவு திட்டத்தை“ தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவாக்ஸ் எனப்படும் உலகலாவிய கோவிட்-19 விநியோகத் திட்டத்தின் கீழ் மலேசியாவுக்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் நேரடிய பேரம் நடத்தப்படும் காரணத்தால் தடுப்பூசியை விநியோகிக்கும் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும் இதனால் நாட்டு மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும்  அமைச்சர் கைரி முன்னதாக கூறியிருந்தார். 


Pengarang :