ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலேசியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி- மலேசியா பரிசீலனை

ஷா ஆலம், ஜூன் 26- டெல்டா வகை நோய்த் தொற்றுக்கு எதிரான கோவிட்-19 தடுப்பூசிகளின் ஆக்கத் தன்மை குறித்து மலேசியா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவது குறித்தும் அது ஆராய்ந்து வருகிறது.

ஆக்கத்தன்மை அதிகரிப்புக்காக மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதன் அவசியம் குறித்து ஆராய்ந்து வரும் வளர்ந்த நாடுகள்  அடுத்தாண்டிற்கான தேவைக்காக இப்போது தொடங்கி தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருவதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்புத் தன்மை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற விரிவாக தரவுகளை நாம் பெற வேண்டியுள்ளது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது டோஸ் தடுப்பூசித் திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டி வரும் என்றார் அவர்.

தலைநகர், மிட்டெக் கண்காட்சி மையத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்தாண்டு தேவைக்காக தடுப்பூசிகளை வாங்குவதற்கான பேர நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு முன்னர்  இவ்விவகாரம் தொடர்பான முழுமையான தரவுகளை நாம் ஆராய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய தொற்றுகளில் 90 விழுக்காடு 90 விழுக்காடு டெல்டா வகையைச் சேர்ந்த நோய்த் தொற்றுகளாகும் என்றும் கைரி சொன்னார்.


Pengarang :