ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜூலை 26 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

கோலாலம்பூர், ஜூலை 5- இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 26ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கும் பின்னர் ஆகஸ்டு 2 ஆம் தேதியும் இக்கூட்டம் நடைபெறும்.

 அதே சமயம், மேலவைக் கூட்டத் தொடர் ஆகஸ்டு 3ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

14 வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான சிறப்புக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான ஆலோசனையை மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு பிரதமர் வழங்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

தேசிய மீட்சித் திட்டம் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளிப்பது, இயங்கலை மற்றும் உறுப்பினர்களின் நேரடி பங்கேற்பு என்ற கலவை முறையில் கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஏதுவாக சட்டங்கள்  மற்றும் விதிமுறைகளை திருத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக அது கூறியது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 150வது ஷரத்தின் (3) பிரிவின் அடிப்படையில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனைத்து அவசரகாலச் சட்டப் பிரகடனங்களும் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.

தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் (எஸ்.ஒ.பி.) பின்பற்றி இந்த கூட்டத் தொடர் நடத்தப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :