ECONOMYNATIONALPBT

புக்கிட் திங்கி பி.கே.பி.டி. பகுதியில் விரைவில் தடுப்பூசி இயக்கம்- குணராஜ் தகவல்

ஷா ஆலம், ஜூலை 18– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட பண்டார் புக்கிட் திங்கி 1, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.

இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த பி.கே.பி.டி. காலக்கட்டத்தில் சுகாதார அமைச்சு அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று இல்லாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படும். நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு நோயின் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்நடவடிக்கையின் வாயிலாக அப்பகுதியில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறிய அவர், வட்டார மக்களின் பாதுகாப்பை முதன்மை நோக்கமாக கருதி இந்நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள 11 அடுக்குமாடி புளோக்குகளைச் சேர்ந்த  969 குடியிருப்பாளர்கள் போலீசாரின் உத்தரவையும் எஸ்.ஓ.பி. விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்கும் அவர் கேட்டுக் கொண்டார்.

நோய்த் தொற்று பரவல் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி 1 அடுக்குமாடி குடியிருப்பு உள்பட சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு இடங்களில் இன்று தொடங்கி 14 நாட்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


Pengarang :