HEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்றும் நோய்த் தொற்று கண்ட 4,761 முன்களப் பணியாளர்களுக்கு மோசமான பாதிப்பு இல்லை

கோலாலம்பூர், ஜூலை 31– மொத்தம் 4,761 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி பெற்றப் பின்னரும் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நோய்த் தொற்று பாதிப்பு இல்லாதவர்களாக (முதல் நிலை) லேசான பாதிப்புக்கு உள்ளானவர்களாகவும் (இரண்டாம் நிலை) இருந்தனர்.

தடுப்பூசி பெற்ற சுகாதார அமைச்சிலுள்ள 246,242 சுகாதாரப் பணியாளர்களில் 4,761 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்கானதாக சுகாதாரத் துறையின் ஆய்வு மற்றும் உதவி நுட்ப பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹஷிம்ஷா முகமது இப்ராஹிம் கூறினார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எட்டு பேருக்கு பாதிப்பு மூன்றாம் நிலையிலும் மூவருக்கு நான்காம் நிலையிலும் இருந்தது. எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் ஐந்தாம் நிலையை யாரும் அடையவில்லை என்று அவர் சொன்னார்.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ள சூழலில் முன்களப் பணியாளர்கள் வேலை செய்யும் காரணத்தால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் உள்ளது என்றார் அவர்.

நோய்த் தொற்று எளிதில் பீடிக்கும் அபாயம் உள்ள சூழலில்  வேலை செய்தாலும் சம்பந்தப்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு பீடிக்கும் நோய்த் தொற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதுதான் தடுப்பூசி மூலம் கிடைத்துள்ள அனுகூலமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :