ECONOMYHEALTHNATIONALPBT

பிரதமருக்கு எதிராக அம்னோவின் நிலைப்பாடு- அமைச்சர் பதவியை துறந்தார் சம்சுல்

கோலாலம்பூர்,  ஆக 3- அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டதன் எதிரொலியாக எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் பதவியை டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார் துறந்துள்ளார்.

அம்னோ எடுத்த சில முடிவுகள் மற்றும் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் உறுப்பினர் என்ற முறையில் மத்திய அரசின் அமைச்சரவையிலிருந்து நான் விலகுகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து லெங்கோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இந்த அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளார்.

அம்னோவைச் சேர்ந்த எத்தனை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அம்னோவின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிட் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறினார்.

எனினும், அந்த உறுப்பினர்களின் பெயர்களை ஜாஹிட் குறிப்பிடவில்லை. இருந்த போதிலும், அவர் முகநூலில் நேரலையாக வெளியிட்ட இந்த அறிவிப்பின் போது சில உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

அவர்களில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், டான்ஸ்ரீ நோ ஓமார், டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான், துங்கு ரசாலி ஹம்சா, டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் ஆகியோரும் அடங்குவர்.


Pengarang :