ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம் துண்டிக்கப்படவில்லை- சுகாதார அமைச்சு உத்தரவாதம்

கோலாலம்பூர், ஆக 29- நாட்டிலுள்ள அனைத்து  அரசாங்க மருத்துவமனைகளிலும் கோவிட்-19 நோய்க்கான மருந்துகளின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

எனினும், அம்மருந்துகளுக்கான தேவை குறுகிய காலத்தில் அபரிமிதமாக அதிகரித்த காரணத்தால் மருந்து விநியோகிப்பாளர்களிடமிருந்து அவை கட்டங் கட்டமாக பெறப்பட்டு வருவதாக அது கூறியது.

பல்வேறு அணுகுமுறைகளின் வாயிலாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மலேசியா மற்றுமின்றி உலகின் பல நாடுகளிலும் கோவிட்-19 பெருந்தொற்று திடீரென அதிகரித்த காரணத்தால் கடந்த மே மாதம் முதல் கோவிட்-19 நோய்க்க்கு சிகிச்சையளிக்க பயன்படும் மருந்துகளுக்கான தேவை அபரிமித அதிகரிப்பைக் கண்டதாக அவர் சொன்னார்.

நாட்டில் மருந்துகளுக்கான தேவை கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது 10 முதல் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளில் கோவிட்-19 மருந்து கையிருப்பில் விளைவுகளை ஏற்படத்தியுள்ளது என்றார் அவர்.

நோய்த் தொற்று அதிகரிப்பின் காரணமாக வெளிநாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் விநியோக நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை உற்பத்தி செய்வதில் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :