ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் பரிவு விவசாயத் திட்டத்தின் கீழ் விளைபொருள் விற்பனை மையங்கள் அமைக்கப்படும்

ஷா ஆலம், ஆக 29- சமூக வேளாண் தோட்டங்களுக்கு அருகில் விளைபொருள் விற்பனை மையங்களை அமைப்பதன் வாயிலாக சிலாங்கூர் பரிவு விவசாயத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் கூறியது.

இங்குள்ள செக்சன் 7, சமூக வேளாண் தோட்டத்தில் உள்ள விளைபொருள் விற்பனை மையம் இதற்கான முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளது என்று அக்கழகத்தின் சந்தை மேம்பாட்டுப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது ஃபாசீர் அப்துல் லத்திப் கூறினார்.

இந்த விற்பனை மையம் கடந்த மாதம் தொடங்கி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்  கிழமைகளில் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த சமூக வேளாண் தோட்ட விற்பனை மையங்களை பூச்சோங், செலாயாங் மற்றும் புத்ரா ஜெயாவில் திறப்பதற்கு தாங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், எனினும் அதன் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.

இத்தகைய விற்பனை மையங்களை அதிகளவில் திறப்பதன் வழி பொதுமக்கள் குறைந்த விலையில் புதிய விளைபொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

இந்த விற்பனை மையங்களில் சமூக வேளாண் தோட்டங்களில் விளையும் உற்பத்தி பொருள்கள் மட்டுமின்றி ரவாங்கில் உள்ள சிலாங்கூர் ஃபுருட் வேலியின் விளைபொருள்களும் இடம் பெற்றிருக்கும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :