ECONOMYHEALTHNATIONAL

வருகைக்கான முன்பதிவின்றி தடுப்பூசி திட்டம் செப். 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படும்

புத்ரா ஜெயா, செப் 8- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வருகைக்கான முன்பதிவின்றி நேரில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நடைமுறை இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது ஆகிய காரணங்களால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இன்னும் தடுப்பூசி பெறாத கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் வரும்16 ஆம் தேதி குறிப்பிட்ட சில சுகாதார மையங்களில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவையை வழங்கும் சுகாதார மையங்களின் பட்டியல் விரைவில் வெளியிட்டப்படும் என்றார் அவர்.

நேரில் சென்று தடுப்பூசி பெறும் நடைமுறை மற்ற மாநிலங்களில் தொடர்ந்து அமலில் இருக்கும். இச்சேவை தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிடும் அறிவிப்புகளை கேட்டு நடக்கும்படி  பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நாட்டில் நேற்று வரை கோவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள் எண்ணிக்கை 69.9 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


Pengarang :