HEALTHMEDIA STATEMENTNATIONAL

தாமதமாக சிகிச்சைப் பெறுவதால் கோவிட்-19 மரணங்கள் அதிகரிப்பு- அன்வார் வேதனை

கோலாலம்பூர், செப் 13- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேதனை தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று தொடர்பான சோதனை மற்றும் சிகிச்சையைப் பெறுவதில் பொது மக்கள் காட்டும் அலட்சியம் காரணமாக மரண எண்ணிக்கை நாட்டில் 20 ஆயிரத்தை  தாண்டிவிட்டது என்று அவர் சொன்னார்.

நேற்று முன்தினம் இந்நோய்த் தொற்று காரணமாக 592 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பல சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்தவை என்ற போதிலும் வீட்டிலேயே நிகழும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை மறுக்க முடியாது என்றார் அவர்.

ஒவ்வொரு மரணத்தையும் நாம் வெறும் புள்ளி விபரமாக மட்டும் பார்க்க முடியாது. அந்த மரணத்திற்குப் பின்னால் அவர்களின்  பிள்ளைகள், குடும்பத்தார்,உறவினர்கள் என பல நேசத்திற்குரியவர்கள் உள்ளதையும் இம்மரணம் பலரை ஆதரவற்றவர்களாக ஆக்கியுள்ளதையம் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மேலும் அதிகமான மரணங்கள் நிகழ்வதைத் தடுக்க தனியார் துறையைச்  சேர்ந்த மருத்துவ நிபணர்களுடன் கலந்தாலோசிக்கும்படி சுகாதார அமைச்சை அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தகைய மரணச் சம்பவங்களைக் கண்டறிய நம்மிடம் வெளிப்படையான போக்கு தேவை. குறிப்பாக  நோயாளிகள் தாமதமாக சிகிச்சைப் பெறுவதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றார் அவர்.

 


Pengarang :