HEALTHMEDIA STATEMENTNATIONAL

குறிப்பிட்ட தரப்பினர் மூன்றாவது தடுப்பூசியை அடுத்த மாதம் பெறுவர்

ஷா ஆலம், செப் 25- அவசியம் உள்ள குறிப்பிட்டத் தரப்பினருக்கு மூன்றாவது டோஸ் மற்றும் ஊக்கத் தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்தப்படும். 

இந்த மூன்றாவது டோஸ் மற்றும் ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்துவது தொடர்பான வழிகாட்டி தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

பின்னர் இந்த வழிகாட்டி அங்கீகாரத்திற்காக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மூன்றாவது டோஸ் மற்றும் ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதற்கான ஒப்புதல் ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து மட்டுமே இதுவரை கிடைத்துள்ளதாக கூறிய அவர், இதற்கான அங்கீகாரத்தை தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பும் வழங்க வேண்டும் என்றார்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டப் பின்னரும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறை எதிர்வினையாற்றத் தவறிய தரப்பினருக்கு மூன்றாவது தடுப்பூசியும் தடுப்பூசி பெற்ற சில மாதங்களுக்கு பின்னர் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் தரப்பினருக்கு ஊக்கத் தடுப்பூசியும் செலுத்தப்படும என்றார் அவர்.

தொடக்கத்தில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தும் பணி தொடங்கப்படும் எனக் கூறிய கைரி, அடுத்த மாதம் தொடங்கி ஊக்கத் தடுப்பூசியை செலுத்தப்படும் என்றார்.

ஆஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துதவதற்கான கால இடைவெளி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கி ஆறு வாரங்களாக குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தற்போது அவ்விரு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கான கால இடைவெளி 9 வாரங்களாக உள்ளன.


Pengarang :