ECONOMYHEALTHNATIONALPBT

கோவிட்-19 : சிப்பாங் மாவட்டத்தில் ஒன்பது நாட்களில் 250 பேர் உயிரிழப்பு

சிப்பாங், செப் 26- சிப்பாங் மாவட்டத்தில் இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 250 பேர் பலியாகியுள்ளதாக சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.

டிங்கில் பகுதியில் மிக அதிகமாக 170 பேர் பலியான வேளையில் சிப்பாங்கில் 51 பேரும் லாபுவில் 31 பேரும் உயரிழந்ததாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அதே காலக்கட்டத்தில் 36,925 நோய்த் தொற்று சம்பவங்கள் இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

வெளியிலிருந்து சிப்பாங் மாவட்டத்திற்கு வருவோர் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாகான் லாலாங் போன்ற பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடும் பகுதிகளைக் கண்காணிப்பதற்காக பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் அமலாக்கப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்  குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும்  விஷயத்தில் அமலாக்கத் தரப்பினரின் உத்தரவுக்கு காத்திராமல் சுயமாகவே எஸ்.ஒ.பி. உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :