MEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தைத் தடுக்க தாமான் மெஸ்ரா பகுதியில் கால்வாய்கள் தரம் உயர்த்தப்படும்

ஷா ஆலம், செப் 27- திடீர் வெள்ளப் பிரச்னையை சமாளிக்க தாமான் மெஸ்ரா, யு1 பகுதியில் கால்வாய்களை தரம் உயர்த்த ஷா ஆலம் மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளது.

கடுமையான மழையின் போது அதிகளவிலான நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக அங்குள்ள நீர் அழுத்த மையமும் பெரிதாக்கப்படும் என்று மாநகர் மன்றத்தின் வாடிகால் பொறியியல் துறையின் தலைவர் டத்தோ பாருஸ் ஹனிப் அகமது கூறினார்.

வெள்ளத்தை  தடுப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில் இப்பகுதி இடம் பெற்றிருந்தது. அப்போது செக்சன் 13 பகுதியில் பல நீர் சேகரிப்பு குளங்களை அமைத்தோம் என்றார் அவர்.

நிதி ஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்வோம் என அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோருடன் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று மாலை சுமார் நான்கு மணி நேரத்திற்கு நீடித்த கனத்த மழை காரணமாக ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பாருஸ் ஹனிப்  கூறினார்.

கிள்ளான் ஆற்றோரப் பகுதிகளில் 148 மில்லிமீட்டர் அளவுக்கு பெய்த மழையின் காரணமாக டாமன்சாரா ஆற்றில் நீர் பெருக்கெடுத்து அருகிலுள்ள பகுதிகளில் புகுந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :