ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசுக்கு 4,500 உணவுக் கூடைகள்- சைம் டார்பி புரோபெர்ட்டி நிறுவனம் வழங்கியது

கோம்பாக், அக் 3- சைம் டார்பி புரோபெர்ட்டி சென்.பெர்ஹாட் நிறுவனம் 4,500 உணவுக் கூடைகளை சிலாங்கூர் மாநில அரசுக்கு வழங்கியது.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கிய இந்த கூடைகள் கேம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மாநில அரசுக்கு பெரிய நன்கொடையாளராக விளங்கி வரும் சைம் டார்பி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2,000 உணவுக் கூடைகளை வழங்கி வருகிறது. சைம் டார்பி நிறுவனத்தின் இந்த நன்கொடை வழி கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் மேலும் அதிகமானோருக்கு உதவ முடியும் என்றார் அவர்.

கோம்பாக் செத்தியா தொகுதி நிலையிலான பேரிடர் பணிப்படை தொடக்க நிகழ்வின் போது சைம் டார்பி நிறுவனத்திடமிருந்து இந்த உதவிப் பொருள்களை பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உணவுக் கூடை திட்டத்திற்காக தலா 50,000 வெள்ளி வழங்கப்படுவதாக மந்திரி புசார் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

 


Pengarang :