ECONOMYSELANGOR

செப். 30 ஆம் தேதி வரை 348 கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி

ஷா ஆலம், அக் 8- செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 205,584 வீடுகளை உள்ளடக்கிய 348 சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டங்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதியளித்துள்ளது.

அவற்றில் 24,090 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்ட வேளையில் மேலும 18,825 வீடுகளை நிர்மாணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீடமைப்பு மற்றும் நல்வாழ்வுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கியதன் வழி 42,915 பேர் சொந்த வீட்டைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இளம் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

சிலாங்கூர் கூ வீடுகளில் வாடகைக்கு இருந்தவர்கள்  தற்போது அதன் உரிமையாளர்களாக ஆகிவிட்டதை அறிந்து தாம் மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடுகளை வாங்குவோருக்கு வாடகைக்கு விடும் திட்டம் சிலாங்கூர் மாநிலத்திற்கு பொருளாதார ரீதியில் 630 கோடி வெள்ளியை ஈட்டித் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டங் கட்டமாக முற்றுப்பெற்று  இவ்வாண்டு இறுதி தொடங்கி  வரும் 2023 ஆம் ஆண்டு வரை அதன் உரிமையாளர்கள் குடியேறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ரூமா சிலாங்கூர் கூ திட்டததை தொடக்கியது. இத்திட்டத்தின் கீழ் வெ. 42,000 முதல் வெ. 250,000 விலையிலான வீடுகள் கட்டப்படுகின்றன.

 


Pengarang :