HEALTHMEDIA STATEMENTNATIONAL

97.9 விழுக்காட்டு புதிய நோயாளிகளுக்கு முதலாம், இரண்டாம் கட்ட பாதிப்பு

கோலாலம்பூர், அக் 13- நாட்டில் நேற்று பிற்பகல் 12.00 மணி வரை அடையாளம் காணப்பட்ட 7,276 கோவிட்-19 நோயாளிகளில் 97.9 விழுக்காட்டினர் அல்லது 7,126 பேர் நோய்த் தாக்கம் இல்லாத அல்லது குறைவான தாக்கம் கொண்ட முதலாம், இரண்டாம் கட்ட நோயாளிகளாவர்.

எஞ்சிய 150 பேர் அல்லது 2.1 விழுக்காட்டினர் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம்  அப்துல்லா கூறினார்.

நிமோனியா எனப்படும் நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் மூன்றாம் கட்ட நோயாளிகளாகவும் ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர்  நான்காம் கட்ட நோயாளிகளாகவும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டவர்கள் ஐந்தாம் கட்ட நோயாளிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று பதிவான 7,266 கோவிட்-19 சம்பவங்களில் 6,869 உள்நாட்டினர்  சம்பந்தப்பட்டவையாகவும் 397 சம்பவங்கள் வெளிநாட்டிரை உட்படுத்தியவையாகவும் இருந்தன என்று நோர் ஹிஷாம் சொன்னார்.

நாடு முழுவதும் நேற்று 10,555 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாக கூறிய அவர், இதன் வழி நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 17 ஆயிரத்து 057 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

தற்போது 724 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 683 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட வேளையில்  எஞ்சிய 42 பேருக்கு நோய்த் தொற்று இருக்கும் சாத்தியத்தின் பேரில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

 


Pengarang :