ECONOMYPBTSELANGOR

ஐ.சீட் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான 250 விண்ணப்பங்கள் அங்கீகாரம்

ஷா ஆலம், அக் 29- ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா இது வரை வர்த்தக உதவித் திட்டங்கள் தொடர்பான 250 விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளதாக சமூக மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

அந்த 250 விண்ணப்பதாரர்களுக்கும் 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான வர்த்தக உபகரணங்கள் இடைத்தரகர்கள் அல்லது நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக அல்லாமல் நேரடியாக வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த ஐ-சீட் திட்டத்திற்கு 370 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பத்தாரர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளனரா என்பதை உறுதி செய்ய தொடர்ந்து ஆய்வு செய்து வருவோம் என்றார் அவர்.

இந்த திட்டத்திற்கு சமூகத் தலைவர்கள் அல்லது கிராமத் தலைவர்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம். மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவுடன் நடத்தப்படும் கூட்டத்தில் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, இங்குள்ள புக்கிட் கெமுனிங்கில் கார் பழுதுபார்ப்பு பட்டறை வைத்திருக்கும் எம். பத்துமலை (வயது 68) என்பவரிடம் பழுதுபார்ப்பு கருவிகளை வைக்கும் உபகரணத்தை கணபதிராவ் ஒப்படைத்தார்.

இதனிடையே, இந்த கருவியை வழங்கி உதவிய சிலாங்கூர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பத்துமலை, வாகன பழுதுபார்ப்பு பணியை எளிதாக மேற்கொள்ள இந்த உபகரணம் பெரிதும் உதவும் என்றார்.

தன் மனைவியுடன் நடத்தி வரும் இந்த பட்டறையை மேலும் விரிவுபடுத்துவதற்கு இந்த உதவி பெரிதும் துணை புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உபகரணத்தை நான் சொந்தமாக வாங்குவதாக இருந்தால் எனக்கு 500 வெள்ளி வரை தேவைப்படும். மாநில அரசின் இந்த உதவியால் அந்த தொகையை என்னால் மிச்சப்படுத்த முடிந்த து என்றார் அவர்.


Pengarang :