ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய மீட்சித் திட்டத் தளர்வு- அலட்சியப் போக்கு வேண்டாம்- மாமன்னர் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 13- தேசிய மீட்சித் திட்டக் (பி.பி.என்.) கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அலட்சிய  போக்குடன் இருக்க வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பொது மக்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.

அவர்கள் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் தற்போதுள்ள தளர்வுகள் மறுபடியும் பறிக்கப்படும் சாத்தியம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஏற்பட்ட சோதனைகளை மக்கள் படிப்பினையாக கொள்ள வேண்டும் என்பதோடு கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நாடு முற்றாக விடுபடும் வரை தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கி வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டு மக்கள் பொறுமை காத்து வரும் அதே வேளையில் சுய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அதோடு மட்டுமின்றி கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கு அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.

எந்தவொரு துயரமும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இருள் மறைந்து ஒளி உண்டாகும் என நான் நம்புகிறேன் என்று மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 1,207 பேர் விருதுகளையும் பட்டங்களையும் பெற்றனர். அவர்களில் 44 பேருக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு கடந்த ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் எனினும் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் தமதுரையில் கூறினார்.

இறைவன் அருளால் நாட்டில் கோவிட்-19 நிலைமை சீரடைந்து வருகிறது. நாடு தேசிய மீட்சித் திட்டத்தின் இறுதி கட்டத்தை அடைந்தவுடன் மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் வழங்கப்படும் என்றார் அவர்.


Pengarang :