ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்களின் ஒத்துழைப்பு, “பிக்“ திட்டத்தின் வெற்றியினால் விழாக்களை கொண்டாடுவது சாத்தியமானது- பிரதமர்

கோலாலம்பூர், நவ 14 – தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) வெற்றி மற்றும் அனைத்து தரப்பினரின் அணுக்கமான ஒத்துழைப்பு காரணமாக பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்துவது இப்போது சாத்தியமாகியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

“பிக்“ தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியின் மூலம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் உள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதற்குரிய வாயப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டிலுள்ள பெரியவர்களுக்கு தடுப்பூசித் செலுத்தும் இயக்கம் 95.1 விழுக்காட்டை எட்டியது இதற்கு காரணமாகும் என்று அவர் சொன்னார்.

நாட்டின் மீட்சியை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழு ஆதரவையும் நம்பிக்கையையும் அளித்த அனைத்து மலேசியர்களுக்கும் தாம்  வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தீபாவளி புதிய இயல்பில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி அரசாங்கம் மாநிலங்களுக்கு இடையேயான பயணத் தடையை நீக்கிய பின்னர் பலர் தங்கள் உறவினர்களைச் சந்திப்பதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்  என்றார் அவர்.

நேற்றிரவு மேட்டிக் எனப்படும் மலேசிய சுற்றுலா மையத்தில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். .

இருந்த போதிலும்,  மலேசியர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு கோவிட்-19 நோய்த் தொற்று மக்களுக்கு தொடர்ந்து தொல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தும் என்பதால் அந்நோய்த் தொற்று அச்சுறுத்தலை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்லின மக்களுக்கிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக கெலுவார்கா மலேசியா எனும் மலேசிய குடும்ப உணர்வுடன் தீபாவளியை கொண்டாடும்படி  மலேசியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :