ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.

ஷா ஆலம், டிச 2- பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் சிலாங்கூரில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்று மாநில அரசு கூறுகிறது.

தொகுதிகள்  அதிகரிப்படுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து இங்கு குடியேறியவர்களால் ஏற்பட்ட மக்கள் தொகை அதிகரிப்பும் ஒரு காரணமாகும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஓரிடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் இடையே உள்ள வாக்கின் மதிப்பு சரிசமமாக இல்லாத சூழல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தொகுதிகளுக்கிடையிலான வாக்காளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மாநில தொகுதி மறுசீரமைப்பு தொடர்பில் கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் எழுப்பிய கேள்விக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சார்பில் பதிலளித்த போது இங் இவ்வாறு கூறினார்.

வாக்களிக்கும் தகுதியை 21 வயதிலிருந்து 18 வயதாக குறைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 47 மற்றும் 119 வது பிரிவுகளில் செய்யப்பட்ட திருத்தம் வாக்களிப்பதற்கும் மக்களவை உறுப்பினர் ஆவதற்குமான தகுதியையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்ட்டு ஈராண்டுகள் ஆன நிலையில் அதன் அமலாக்க நடவடிக்கைகள் இவ்வாண்டு டிசம்பர் 31 முடிவுக்கு வந்து அடுத்தாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :