ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “இக்தியார் சிலாங்கூர் பங்கிட்“ திட்டத்தின் கீழ் பல்வேறு அனுகூலங்கள்

ஷா ஆலம், டிச 29– இம்மாதம் 17 முதல 19 ஆம் தேதி வரை ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்தியார் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் பல்வேறு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன.

இரண்டு மாத காலத்திற்கு குடிநீர் கட்டண விலக்களிப்பு மற்றும் ஹிஜ்ரா கடனை செலுத்துவதை இரு மாதங்களுக்கு ஒத்தி வைக்க அனுமதி ஆகியவையும் அந்த அனுகூலங்களில் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ சிறப்பு நிதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.

இது போன்ற வெள்ளப் பேரிடர் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஏற்படும். ஆயினும், மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கும் கடப்பாட்டிலிருந்து விலகியோடுவதற்கு இந்த இயற்கை சீற்றத்தை ஒரு காரணமாக காட்டுவது எனது நோக்கமல்ல என்றார் அவர்.

நான் மக்களிடம் மன்னிப்பு கோருகிறன். இந்த துன்பவியல் சம்பவத்திலிருந்து சிலாங்கூர் மக்கள் மீண்டு வருவதற்கு என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறினார்.

யாரும் எதிர்பாராத வகையில் ஒரே நாளில் 450 மில்லி மீட்டர் அளவுக்கு அடை மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்த காரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதன் காரணமாக மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ள 205 துயர் துடைப்பு மையங்களில் சுமார் 40,000 பேர் அடைக்கலம் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒவ்வோராண்டும்  பருவமழையை எதிர் கொள்ள நாம் தயாராக இருப்போம். மாநில அரசு நிறுவனங்கள் கடந்த அக்டோபர் முதல் எச்சரிக்கையை விடுத்த வந்தன. இருந்த போதிலும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அமிருடின் தெரிவித்தார்.


Pengarang :