ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 5,566 ஆக உயர்வு

கோலாலம்பூர், பிப் 2 - நாட்டில் புதிய தினசரி கோவிட் -19 நோய்த் தொற்று  எண்ணிக்கை மீண்டும் ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது.  

நேற்று மொத்தம் 5,566 புதிய சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4,774 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ​

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 76 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில்  51 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சியோர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்றையச் சம்பவங்களில் 227 இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் 5,339 சம்பவங்கள் உள்ளூரில் பரவியவை என்றும் அவர் குறிப்பிட்டார். 

கோவிட்-19 நோயாளிகளில் 113 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 59 பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுகிறது என்று  நேற்று வெளியிட்ட தினசரி கோவிட் -19 நிலவரம் தொடர்பான அறிக்கையில் தெரிவித்தார். 

இந்நோய்த் தொற்றிலிருந்து 3,187 பேர் நேற்று குணமடைந்தனர். இதன்வழி  நோயிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 27 லட்சத்து 87 ஆயிரத்து 190 ஆகக் பதிவாகியுள்ளது.

 அதே நேரத்தில் நேற்று புதிதாக ஏழு நோய்த் தொற்று மையங்கள் அடையாளம்  காணப்பட்டன. இதனுடன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 318 ஆகப் பதிவாகியுள்ளது.

Pengarang :