ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

சிலாங்கூரில் கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி விற்பனை- மாநில அரசு நடவடிக்கை

ஷா ஆலம், பிப் 5- சிலாங்கூரில் வரும் திங்கள் தொடங்கி இரு வாரங்களுக்கு கோழியை கிலோ 8.00 வெள்ளி உச்சவரம்பு விலையில் மாநில அரசு விற்பனை செய்யும். 

உணவுப் பொருளின் அபரிமித விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பி.கே.பி.எஸ். எனப்படும் மாநில விவசாய மேம்பாட்டுக் கழக தலைமையகத்திலும் ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தையிலும் 50,000 கோழிகள் இந்த உச்ச வரம்பு விலையில் விற்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்நோக்கத்திற்காக ஏசான் உணவு விலை தலையீட்டுத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் மாநிலத்திலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றார்.

முதல் கட்டமாக ஒருவருக்கு இரு கோழிகள் மட்டுமே விற்கப்படும். இந்த சலுகை விற்பனையை வர்த்தகத் துறையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

நம்மிடம் போதுமான  கோழி பண்ணை உள்ளதால் அந்த உணவுப் பொருளின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. மூன்று மாத காலத்தில் 540,000 கோழிகளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும் என்றார் அவர்.

இன்று இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ்.சில் இந்த கோழி விற்பனைத் திட்டத்தை தொடக்கி வைத்த உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்

 


Pengarang :