ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ மூடாவில் கால்வாய்களில் துப்புரவுப் பணி-  கணபதிராவ் நடவடிக்கை

ஷா ஆலம், பிப் 12– தாமான் ஸ்ரீ மூடாவில் குப்பைக் கூளங்களால் அடைபட்டிருக்கும் கால்வாய்களைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ. கணபதிராவ் தீவிரம் காட்டி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக அவர் சிலாங்கூரில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார்.

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேமேஜ்மெண்ட் திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான யுகராஜா, வீ.பாப்பா ராய்டு மற்றும் குத்தகையாளர்கள் ஆகியோரும் இப்பயணத்தில் உடனிருந்தனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக தாமான் ஸ்ரீ மூடா விளங்குகிறது. இங்கு வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்ட நிலையில் கடந்த மாதம் தொடங்கி கால்வாய் துப்புரவு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் இரண்டாம் கட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை இந்த குடியிருப்பு பகுதியில் கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஆகிய தரப்பினரின் கூட்டு முயற்சியில் மாபெரும் துப்புரவு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :