MEDIA STATEMENT

வளர்ப்புத் தாயை வெட்டிக் கொன்ற ஆடவனுக்கு ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவல் 

கோத்தா பாரு, பிப் 17- தன் வளர்ப்புத் தாயை பாராங் கத்தியல் வெட்டிக் கொன்ற ஆடவனுக்கு எதிராக போலீசார் தடுப்பூக் காவல் அனுமதியைப் பெற்றுள்ளனர்.

அந்த 37 வயது ஆடவனுக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதியை கிளந்தான் நீதிமன்ற இயக்குநர் ஜமான் முகமது நோர் குவா மூசாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்கியதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.

அந்த ஆடவனை குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரிப்பதற்கு ஏதுவாக ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

தன் மகனால் வெட்டிக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 54 வயது மாதுவின் சடலத்தை போலீசார் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டிலிருந்து மீட்டனர்.

இச்சம்பவம், குவாங் மூசாங், ஜெரேக், கம்போங் பத்து மாச்சாங்கில் நேற்று நிகழ்ந்தது. தாயைக் கொலை செய்த அந்த ஆடவன் பின்னர் பெர்த்தாம்  போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை விவரித்ததைத் தொடர்ந்து போலீசார் அவனைக் கைது செய்தனர்.

போதைப் பித்தனான அந்த ஆடவன் மன நல பாதிப்புக்கும் உள்ளாகியிருந்ததாக நம்பப்படுகிறது.


Pengarang :