HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோயாளிகளுக்கு கடும் விளைவுகள் ஏற்படுவதை  ஊக்கத் தடுப்பூசி தடுக்கிறது

ஷா ஆலம், பிப் 17– கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையான விளைவுகள் ஏற்படுவதிலிருந்து தடுப்பதில் தடுப்பூசியும் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியும் உதவுகின்றன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் 80 முதல் 90 விழுக்காடு வரை குறைந்துள்ளது இதற்கு தக்க சான்றாகும் என்று அவர் சொன்னார்.

ஆகவே, ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கு பொதுமக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தடுப்பூசி நோய்த் தொற்றை தடுக்கும் என்பதற்கு உத்தவாதம் இல்லைதான். ஆனாலும், கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதை அது தடுக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று பதிவான கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளில் 24 பேர் அல்லது 24.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் 51 பேர் அல்லது 52.8 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தி ஊக்கத் தடுப்பூசியை இன்னும் செலுத்தாமலிருப்பவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் வகை தொற்று அதிவேகத்தில் பரவுவது மற்றும் சமூக பொருளாதார நடவடிக்கைகள் திறக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மலேசியா மட்டுமின்றி இதர நாடுகளிலும் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

 


Pengarang :