ECONOMYSELANGOR

மக்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய லோரி ஏசான் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம் பிப் 18–  பொதுமக்கள் மலிவு விலையில் கோழி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக நடமாடும் சந்தை திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்நோக்கத்திற்காக அடுத்த மாதம் தொடங்கி இரு லோரிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

தற்போது கோழி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஒரு லோரி மட்டுமே பயன்படுத்தப்படுவதால் கோழி மற்றும் முட்டை விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் கீழ் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முகமது ஹஸ்ரி அபு ஹசான்  கூறினார்.

மேலும் அதிகமானோர் பயன்பெறுவதற்கு ஏதுவாக மேலும் இரு லோரிகளை (லோரி ஏசான்) பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தங்கள் பகுதிக்கு இந்த லோரிகள் அடிக்கடி வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் என்றார் அவர்.

நேற்று, பூச்சோங், பங்காசபுரி ஸ்ரீ ஜாத்தியில் இந்த லோரி ஏசான் வர்த்தகத்தை மேற்கொண்டது. இதன் மூல சுற்றுவட்டார மக்கள் கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி, காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியது.

மலிவு விலையில் உணவுப் பொருள்களை விற்கும் இத்திட்டம் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இம்மாதம் 14 ஆம் தேதி முதல் மார்ச் 30 வரை நடைபெறும்.

 


Pengarang :