ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

ஜனவரி தொடங்கிக் கல்வி தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வு

கோலாலம்பூர், பிப் 23– சமீபத்திய நோய்த் தொற்றியல் வாரத்தில் கல்வி சம்பந்தப்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளன.  இவ்வாண்டின் 6 வது தொற்று வாரத்தில் 61 ஆக இருந்த கல்வித் தொற்று மையங்களின் எண்ணிக்கை 7 வது தொற்று வாரத்தில் 92 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் தேதி தொடங்கிப் பிப்ரவரி 19 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 367 கல்வி தொற்று மையங்களைத் தயார் நிலை மற்றும் நெருக்கடி எதிர்வினை மையம் (சி.பி.ஆர்.சி.) பதிவு செய்துள்ளதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அந்தத் தொற்று மையங்களில் 346 இன்னும் தீவிரமாக உள்ள வேளையில் 21 மையங்கள் முடிவுக்கு வந்து விட்டதாக அவர் சொன்னார்.

கடந்த 5 வது நோய்த் தொற்று வாரத்தில் தொற்று மையங்களின் எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும் சீனப்புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் 6 வது மற்றும் 7 வது வாரங்களில் தொற்று மையங்கள் அபரிமித உயர்வைக் கண்டன என்று   அவர் தெரிவித்தார்.

கல்வி தொற்று மையங்கள் அதிகம் பதிவான மாநிலங்களில் கிளந்தான் (54) முதலிடம் வகிப்பதாகக் கூறிய அவர், அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூர் (49), பகாங் (38), கோலாலம்பூர், (37), சபா (34) ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார்.

மொத்தம் 328 தொற்று மையங்கள் அல்லது 89.4 விழுக்காடு மாணவர்கள் சம்பந்தப்பட்டவையாகவும் 31 மையங்கள் அல்லது 8.5 விழுக்காடு ஆசிரியர்கள் அல்லது விரிவுரையாளர்கள் சம்பந்தப்பட்டவையாகவும் உள்ளன. மேலும் 1.6 விழுக்காடு பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரையும் 0.6 விழுக்காடு அவர்களின் குடும்பத்தினரையும் உள்ளடக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தொற்று மையங்களில் பெரும்பாலானவை நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது குறைவான அறிகுறிகளைக் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :