ANTARABANGSAECONOMY

ரஷியத் தாக்குதல்- உக்ரேனிலிருந்து 11 பிரஜைகளை வெளியேற்ற மலேசியா நடவடிக்கை

புனோம் பென், பிப் 25– உக்ரேன் நாட்டிலுள்ள 11 பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் மலேசியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அந்தப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உக்ரேன் நாட்டின் கியூ நகரிலுள்ள மலேசியத் தூதரகம் அந்நாட்டிலுள்ள மலேசியர்களைத் தொடர்பு கொண்டு வருகிறது. கியூ நகருக்கு வெளியே உள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தலைநகரில் உள்ளவர்கள் தூதரகத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள் என அவர் சொன்னார்.

எட்டு மலேசியர்கள் கியூ நகரிலும் எஞ்சியவர்கள் தலைநகருக்கு வெளியிலும் உள்ளனர். அந்நாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நமது பிரதான நோக்கமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொது வான் போக்குவரத்துக்கு ஆபத்து மிகுந்து காணப்படுவதால் தனது வான் எல்லையை பொது போக்குவரத்துக்கு மூடப்படுவதாக உக்ரேன் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தது.

இதன் காரணமாக அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் தரை மார்க்கமாக அதாவது போலந்து நாட்டின் வழியாக வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 782 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க அவர்களுக்கு 10 மணி நேரம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

 


Pengarang :