ECONOMYSELANGOR

பத்து தீகா தொகுதியில் மலிவு விலையில் 800 கோழிகள் விற்பனை

ஷா ஆலம், பிப் 27- பத்து தீகா தொகுதியில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தினால் விநியோகிக்கப்பட்ட 800 கோழிகள் விரைவாக விற்றுத் தீர்ந்தன.
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் ஏற்பாட்டிலான இந்த மலிவு விலை கோழி விற்பனை இங்குள்ள செக்சன் 18, அல்-ஹிடாயா பள்ளிவாசல் அருகே உள்ள வர்த்தகப் பகுதியில் நடைபெற்றது

இந்த விற்பனையில் கலந்து கொள்ளும் முதல் 500 பேருக்கு 5.00 வெள்ளிக்கான கழிவு விலை பற்றுச் சீட்டும் வழங்கப்பட்டது.

மலிவு விலையில் கோழியை விற்பனை செய்யும் இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் அமோக ஆதரவு கிடைத்ததாக இத்திட்ட இயக்குநர் ஹம்டான் ஹருண் கூறினார்.

காலை 9.00 மணிக்கு இவ்விற்பனை சந்தை தொடங்கப்படவிருந்த நிலையில் 8.00 மணி முதலே பொது மக்கள் வரிசையில் காத்திருந்தனர். வானம் மேகமூட்டமாக இருந்த போதிலும் பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருந்து அந்த உணவுப் பொருளை வாங்கிச் சென்றனர் என்றார் அவர்.

கோழி வாங்குவோருக்கு 5.00 வெள்ளி கட்டணக் கழிவுக்கான பற்றுச் சீட்டை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சந்தையை விட மலிவான விலையில் இந்தக் கோழி விற்கப்படும் வேளையில் அதன் விலையை மேலும் குறைப்பதற்கு ஏதுவாக 5.00 வெள்ளிக்கான கூப்பன்களை  அவர் வழங்கியுள்ளார் என ஹம்டான் குறிப்பிட்டார்.


Pengarang :