ECONOMYHEALTHNATIONAL

மைசெஜத்ரா இலக்கவியல் சான்றிதழ் நகலை முதலாளிகள் ஏற்க வேண்டும்- கைரி வலியுறுத்து

குளுவாங், பிப் 28- கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் (சி.ஏ.சி.) நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வெளியிடப்படும் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கான இலக்கவியல் சான்றிதழ் (எச்.எஸ்.ஒ.) மற்றும் தனிமைப்படுத்துதல் விடுவிப்பு கடிதம் (ஆர்.ஒ.) ஆகியவற்றை நாட்டிலுள்ள அனைத்து முதலாளிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலக்கவியல் சான்றிதழைப் பல முதலாளிகள் ஏற்க மறுப்பதோடு எழுத்துப்பூர்வ அறிக்கையைக் கோருவதாகக் கூறிப் பல நோயாளிகள் சி.ஏ.சி. மையங்களுக்கு வருவதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சி.ஏ.சி. மையங்களுக்கு வருவோரில் 30 முதல் 50 விழுக்காட்டினர் வீட்டுக் கண்காணிப்பில் இருந்த போது உடல் நிலை மோசமடைந்த காரணத்திற்காக வந்தவர்கள் அல்ல என்பது பி.கே.ஆர்.சி. எனப்படும் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்தின் தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களில் 90 விழுக்காட்டினர் தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலிருந்து தாங்கள் விடுவிக்கப்பட்டதைக் காட்டும் எழுத்துப்பூர்வ அறிக்கையைப் பெற வந்தவர்களாவர் என்றார் அவர்.

இதன் காரணமாக சுகாதார அமைச்சில் உள்ள பணியாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. நோயாளிகளை மதிப்பீடு செய்வதுதான் அவர்களின் பணியே தவிர எழுத்துப்பூர்வ அறிக்கைத் தயாரிப்பதல்ல என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள சிம்பாங் ரெங்கம் சி.ஏ.சி. சுகாதார மையத்திற்கு வருகை புரிந்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பல முதலாளிகள் எச்.எஸ்.ஒ. அல்லது ஆர்.ஒ. சான்றிதழ்களை ஏற்க மறுப்பது தொடர்பில் தமது அமைச்சு புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :