ECONOMYHEALTH

1,332 மையங்களில் சுகாதார அமைச்சு  சோதனை- 2.4 கோடி வெள்ளி பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்கள் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 3– கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை 1,332 மையங்களில் சுகாதார அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு மேற்கொண்ட சோதனைகளில் 2 கோடியே 39 லட்சத்து 56 ஆயிரத்து 851 வெள்ளி மதிப்பிலான சுகாதாரப் பொருள்களைப் பறிமுதல் செய்யப்பட்டன.

பொது மக்களிடமிருந்து கிடைக்கும் புகார்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் இத்தகைய சோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சு கூறியது.

பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்களை வைத்திருக்கும் அல்லது விற்பனை செய்யும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது 1952 ஆம் ஆண்டு மருந்து விற்பனைச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தெரிவித்தது.

டுங்குன் உறுப்பினர் வான் ஹசான் முகமது ரம்லி எழுப்பிய கேள்விக்கு அமைச்சின் சார்பில் இந்தப் பதில் வழங்கப்பட்டது. ஆபத்தான மற்றும் பதிவு செய்யப்படாத மருத்துவப் பொருள்கள் தொடர்பில் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டு வருவதால் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் மருந்து விற்பனையை அமைச்சு கண்காணிக்கிறதா? என வான் ஹசான் கேள்வியெழுப்பியிருந்தார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் குறித்து இணையம் வாயிலாகச் செய்யப்படும் விளம்பரங்கள் மற்றும் விற்பனையை அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத மருத்துவப் பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை நிறுத்தும்படி கடந்த 2020 முதல் இணையத் தள நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2021 முதல் உள்நாட்டு மின் வணிகத் தளங்களிலிருந்து 8,145 பதிவு செய்யப்படாத மருந்துப் பொருள்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை அகற்றும்படி உத்தவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.


Pengarang :