ECONOMYSELANGOR

செல்ஹாக் மாநாடு- எதிர்காலத்தில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாகத் திட்டம்

ஷா ஆலம், மார்ச் 7- வரும் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாட்டில் (செல்ஹாக்) பங்கேற்போரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற சாதகமான பதிலின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹலால் தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

மிகவும் சிறப்பான முறையில் இந்த மாநாடு முடிவுக்கு வந்தது. வருகையாளர்களைப் பொறுத்த வரை அமோக ஆதரவு கிடைத்தது. அதே சமயம், கண்காட்சியில் பங்கேற்றவர்களும் முழு ஈடுபாட்டைக் காட்டினர் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இந்தச் செல்ஹாக் மாநாடு விரிவான அளவில் நடத்தப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், அடுத்த மாநாடுகளில் பங்கேற்பதற்குக் கண்காட்சியில் பங்கேற்றவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.

இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற செல்ஹாக் மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிலாங்கூர் அனைத்துலக ஹலால் அமைப்பின் ஒத்துழைப்புடன் மாநில அரசு முதன் முறையாக இந்த மாநாட்டை நடத்தியது. கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கிய மாநாடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.


Pengarang :