ECONOMYNATIONALPBT

வெள்ளப் பிரச்னையை விவாதிக்கும் பிரேரணையை மக்களவை ஏற்றுக் கொண்டது

கோலாலம்பூர், மார்ச் 8- மாநகரின் பல பகுதிகளில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணையை மக்களவை சபநாயகர் டான்ஸ்ரீ அஸார் அஜிசான் ஹருண் ஏற்றுக் கொண்டதோடு அச்சம்பவம் குறித்து அவையில் விவாதிப்பதற்கும் ஒப்புக் கொண்டார்.

இவ்விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரும் தகவல் அறிக்கையை புக்கிட் பிந்தாங் பக்கத்தான் உறுப்பினர் ஃபூங் கூய் லுன்னிடமிருந்து நேற்றிரவு 10.00 மணிக்கும் லெம்பா பந்தாய் பக்கத்தான் உறுப்பினர் அகமது பஹாமி முகமது பட்சிலிடமிருந்து இன்று காலை 10.00 மணிக்கும் தாம் பெற்றதாக அஸார் தெரிவித்தார்.

இந்த பிரேரணை குறித்து ஆராய்வதற்கு கூட்ட விதி 18(2) இன் கீழ் 24 மணி நேரம் தேவைப்படும் என்பதால் இதன் தொடர்பான விவாதம் இன்று நடைபெறாது என்று அவர் விளக்கினார்.

மாண்புமிகு ஃபூங்கிடமிருந்து நேற்றிரவு 10.00 மணிக்கு பிரேரணையைப் பெற்றேன். கூட்ட விதியின்படி அவருக்கு பதிலளிக்க எனக்கு இன்று வரை அவகாசம் உள்ளது. லெம்பா பந்தாய் உறுப்பினரிடமிருந்து இன்று காலை 10.00 மணிக்கு பிரேரணையைப் பெற்றேன் அதற்கு பதிலளிக்க எனக்கு நாளை காலை வரை அவகாசம் உள்ளது.

எனினும், பூர்வாங்க அடிப்படையில் அவ்விவகாரம் குறித்து விவாதிக்க நான் பரிந்துரைக்கிறேன். எனினும் அந்த விவாதம் இன்று நடைபெறாது. காரணம் இதனை பரிசீலிப்பதற்கு 24 மணி நேர அவகாசம் தேவைப்படுகிறது. இரண்டு பிரேரணைகளும் ஒரே விஷயத்தை மையாக கொண்டுள்ளதால் ஒரு பிரேரணைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

முன்னதாக, மாட்சிமை தங்கிய பேரரசரின் உரை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்னர் ஃபூங் எழுந்து நேற்று கோலாலம்பூரின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று அவையைக் கேட்டுக் கொண்டார். அக்கோரிக்கையை அகமது பஹாமி வழி மொழிந்தார்.

 


Pengarang :