ECONOMYNATIONAL

இன்று ஜோகூர் மாநிலத் தேர்தல்- 1021 வாக்களிப்பு மையங்கள் காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன

ஜோகூர் பாரு, மார்ச் 12- ஜோகூர் மாநிலத்தின் 15 தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 18 முதல் 20 வயது வரையிலான இளையோர் முதன் முறையாகத் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர்.

இத்தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1,021 வாக்களிப்பு மையங்கள் காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன. வாக்களிக்கத் தகுதி பெற்ற 25 லட்சத்து 97 ஆயிரத்து 742 வாக்காளர்களில் 25 லட்சத்து 39 ஆயிரத்து 606 பேர் இன்று தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர்.

இந்தத் தேர்தலுக்காக 36,729 தபால் வாக்குகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வேளையில் போலீஸ், இராணுவத்தைச் சேர்ந்த 87 விழுக்காட்டினர் அல்லது 18,625 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர்.

இன்றைய தேர்தலில் மெர்சிங்கிலுள்ள பாலாய் ராயா புலாவ் பெசார் காலை 11.00 மணிக்கும் மெர்சிங், புலாவ் பெமாங்கில் வாக்குச் சாவடி 1.00 மணிக்கும் மூடப்படும்.

மேலும் 15 வாக்குச் சாவடிகள் பிற்பகல் 2.00 மணிக்கும் 41 வாக்குச் சாவடிகள் மாலை 4.00 மணிக்கும் மூடப்படும். எஞ்சிய அனைத்து வாக்குச் சாவடிகளும் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி, பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி பெஜூவாங் தானா ஆயர்,  கெஅடிலான் கட்சியை உள்ளடக்கிய பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி, மூடா எனப்படும் ஜனநாயக கூட்டணி, வாரிசான், பார்ட்டி பங்சா மலேசியா, புத்ரா எனப்படும் பார்ட்டி பூமிபுத்ரா பெர்க்காசா மலேசியா, பி.எஸ்.எம்.ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் 18 முதல் 20 வயது வரையிலான 173,177 புதிய வாக்காளர்கள் முதன் முறையாக வாக்களிக்கவுள்ளனர்.


Pengarang :