ECONOMYNATIONAL

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கெஅடிலான், ஹராப்பான் கூட்டணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்- வாக்காளர்களுக்கு வேண்டுகோள்

ஜோகூர் பாரு, மார்ச் 12– இன்று நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் கெஅடிலான் மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பை வழங்கும்படி மாநிலத்திலுள்ள வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

துரோகத்தால் தோற்கடிக்கப்பட்ட கசப்பான அத்தியாயத்திற்குப் பிறகு பொதுமக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய தருணம் அந்தக் கூட்டணிக்கு மீண்டும் கிட்டியுள்ளது என்று கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கெஅடிலான், பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி புரிந்த 22 மாதக் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆகவே அக்கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். நாங்கள் ஏமாற்றியதாகவும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டதாகவும் கூடச் சில குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையைச் சொல்லப் போனால், எங்களால் செய்ய முடியாமலில்லை. ஆனால் பணிகளைச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டோம்  என்றார் அவர்.

எதனால் நாங்கள் பணி செய்வதிலிருந்து தடுக்கப்பட்டோம்? எங்களால் செய்ய முடியும் என்பது எதிரிகளுக்கு நன்கு தெரியும். நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு கிட்டாமல் போய்விடும். அதனால் அவர்கள் பயந்தார்கள்.

எங்கள் சேவைத் திறனுக்குப் பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

லார்க்கின் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் லார்க்கின் தொகுதி வேட்பாளர்  டாக்டர்  ஜாமில் நஜ்வா அர்பாயினை ஆதரித்து பிரசாரம் செய்த போது அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு அரசாங்கத்திற்கு குறைந்தது ஐந்து ஆண்டு கால அவகாசம் தேவைப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அமிருடின் சொன்னார்.

ஜோகூர் மாநிலத்திற்காகப் பல்வேறு திட்டங்கள் வரையப்பட்டு அமலாக்கத்திற்குத் தயாரான போது ஆட்சிக் கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டது மிகவும் வேதனையைத் தருவதாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :