ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இ.சி.ஆர்.எல். திட்டத்தின் வழி இரயில் போக்குவரத்து மையமாக வட சிலாங்கூர் மாறும்- மந்திரி புசார்

உலு சிலாங்கூர், மார்ச் 13- கிழக்குக் கரை இரயில் திட்ட (இ.சி.ஆர்.எல்.)  உருவாக்கம் காரணமாக வட சிலாங்கூர் குறிப்பாக பத்தாங் காலி இரயில் போக்குவரத்து மற்றும் தளவாட தொழில் துறை மையமாக உருவாக்கம் காணும்.

இ.சி.ஆர்.எல். திட்டத்தை வடக்கு தடத்தில் மேற்கொள்வதன் மூலம் கிள்ளான் துறைமுகத்திற்கு கொள்கலன்களைக் கொண்டுச் செல்லும் பணி எளிதாகும் என்று மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முன்பு  வட பகுதியில் உள்ளவர்கள் கோலாலம்பூர் வந்து பின்னர் அங்கிருந்து கிள்ளான் துறைமுகத்தை அடைய வேண்டும். இ.சி.ஆ.எல். திட்ட அமலாக்கத்தின் வழி வடக்குத் தடத்தின் ஒரு பகுதியாக விளங்கும் செரெண்டா மாற்று வழியின் வாயிலாக பொருள்களை கிள்ளான் துறைமுகத்திற்கு அனுப்ப இயலும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு பெலியான் கார்டன் வீடமைப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்ட்ஸ் செல்லும் வழித்தடத்தில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரையை தாம் பெற்றுள்ளதாகவும் அவர குறிப்பிட்டார்.

எனினும், அப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர் சுற்றுச் சூழல் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் மீதும் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.

இ.சி.ஆர்.எல். திட்டத்தை வடக்கு தடத்தில் மேற்கொள்வதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமிருடின் கடந்தாண்டு டிசம்பர் 2 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :