ECONOMYNATIONAL

சட்டமன்றக் கூட்டத் தொடரைச் சிலாங்கூர் சுல்தான் இன்று தொடக்கி வைக்கிறார்

ஷா ஆலம், மார்ச் 14 –  சிலாங்கூர் மாநில 14வது சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை மேன்மை தங்கிய சுல்தான் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று திறந்து வைக்கிறார்.

மேன்மை தங்கிய தெங்கு பெர்மைசூரி  நோராஷிகின் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றக் கூட்டம் இன்று மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்பட இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு அமர்வில் பங்கேற்பதற்கு முன்னர்க் கோவிட்-19 பரிசோதனையையும் மேற்கொண்டிருக்க வேண்டும். நோய்க்கான அறிகுறி கொண்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்களில் மாநிலப் பட்ஜெட், அண்மைய வெள்ளம் மற்றும் எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு மாறுவதில் மாநில அரசின் தயார் நிலை ஆகியவை பிரதான அம்சங்களாக இருக்கும்.

மக்கள் நலன் தொடர்பான பல்வேறு விஷயங்களை எழுப்பச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டமன்றச் சபாநாயகர் இங் சுயி லிம் உறுதியளித்தார்.

சட்ட மன்றக் கூட்டத் தொடரின் விவாதங்களை Media Selangor  ஊடகத்தின் பேஸ்புக் மற்றும் SelangorTV Youtube  காணொளி வாயிலாக நேரடியாகக் காணலாம். மேலும், selangorkini.my மற்றும் selangorjournal.my  வாயிலாகவும் அவை நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியும்.


Pengarang :