ECONOMYSELANGOR

சாலை பழுதை விரைவாகக் கண்டறிந்து சரி செய்யும் விவேக மேலாண்மை முறை நாளை அமல்

ஷா ஆலம், மார்ச் 15- பழுதடைந்த சாலைகளை விரைவாகக் கண்டறிந்து சரி செய்ய உதவும் சிலாங்கூர் விவேகச் சாலை சொத்து மேலாண்மை முறை நாளை அமல்படுத்தப்படவுள்ளது.

செல்கேம் சென். பெர்ஹாட் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலி முறை சாலை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் மாநில அரசின் முயற்சிகளுக்குத் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய அம்சங்களில் சாலை சீரமைப்பு விவகாரமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனத்தின் டாஷ்போர்ட் பகுதியில் பொருத்தப்படும் 360 டிகிரி சுழலும் கேமரா, டிரோன் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்த விவேக மேலாண்மை முறை  பயன்படுத்துகிறது.

இந்த செயலியை பல்வேறு துறைகள் விரிவான அளவில் பயன்படுத்த முடியும் எனக் கூறிய செல்கேம் நிறுவனம், இதன் மூலம் சிலாங்கூரில் சாலை மேலாண்மைப் பணிகளை ஒருமுகப்படுத்த முடியும் என்றது.

இந்த செயலியின் அறிமுக நிகழ்வு நாளை இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெறும்.

சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதைக் கண்டறிவதில் டிரோன் மற்றும் நுண் உணர்வு கருவியின் பயன்பாடு பராமரிப்பு பணிகள் தர நிர்ணயத்திற்கேற்ப அமைவதை உறுதி செய்யும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.


Pengarang :