ECONOMYSELANGOR

மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி வெ. 500,000 வருமானம் – ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் தகவல்

ஷா ஆலம், மார்ச் 24– கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி  ஆரம்பிக்கப்பட்ட ஏசான் உணவுப் பொருள் விலை மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி 496,852 வெள்ளி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக தலைமையகம், சிலாங்கூர் மொத்த விலை சந்தை ஆகிய இடங்களிலும்  வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட  நடமாடும் மக்கள் பரிவு விற்பனை திட்டத்திலும் கோழி மற்றும் முட்டையை விற்பனை செய்ததன் வாயிலாக இந்த வருமானம் ஈட்டப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த விற்பனைத் திட்டத்தில் பெரும் பகுதி அதாவது 337,524 வெள்ளி  கோழி விற்பனையின் மூலமாகவும் 132,000 வெள்ளி முட்டை விற்பனை மூலமாகவும் கிடைக்கப்பெற்றன.
சந்தை விலையை விட 24 விழுக்காடு குறைவான விலையில் இப்பொருள்களை விற்றதன் மூலம் பொது மக்கள் 149,619 வெள்ளியை மிச்சப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பி.கே.பி.எஸ். தலைமையகத்தில் நடைபெற்ற பி.கே.பி.எஸ். மற்றும் பி.கே.என்.எஸ். (சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழகம்( உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள 64 இடங்களில் வார இறுதி நாட்களில் இந்த மலிவு விலை விற்பனைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைப்பதில் இத்திட்டம் பெரிதும் துணை புரிந்தது.


Pengarang :