ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 22,491 பேர் பாதிப்பு- 65 பேர் உயிரிழப்பு

ஷா ஆலம், மார்ச் 24 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 22,491 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடும் தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவான எண்ணிக்கையில் பதிவாகி வருவதாக கூறிய அவர், 73 விழுக்காட்டினர் அல்லது 165 பேர் மட்டுமே அத்தரப்பினராவர் என்றார்.

எஞ்சிய 99.27 விழுக்காட்டினர் அல்லது 22,326 பேர் நோய்க்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்ட மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மொத்தம்  6,061 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் அவர்களில் 143 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 189 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது  என்றார் அவர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை புத்ரா ஜெயாவில் 100 விழுக்காடாகவும் கோலாலம்பூரில் 67 விழுக்காடாகவும் ஜோகூரில் 59 விழுக்காடாகவும் சிலாங்கூரில் 57 விழுக்காடாகவும் கிளந்தானில் 52 விழுக்காடாகவும் உள்ளது என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் பின்வருமாறு:

  • முதல் கட்டம்- 10,601 சம்பவங்கள் (47.14 விழுக்காடு)
  • இரண்டாம் கட்டம்- 11,725 சம்பவங்கள் (52.13 விழுக்காடு)
  • மூன்றாம் கட்டம்- 71 சம்பவங்கள் (0.31 விழுக்காடு)
  • நான்காம் கட்டம் – 44 சம்பவங்கள் (0.20  விழுக்காடு)
  • ஐந்தாம் கட்டம்- 50 சம்பவங்கள் (0.22  விழுக்காடு)

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆகப் பதிவானது. அவர்களில் 15  பேர் மருத்துவமனை வருவதற்கு முன்னரே உயிரிழந்தவர்களாவர்.

நேற்று நாடு முழுவதும் 26,234 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்ந்து இந்நோய்த் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 771 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :