ECONOMYSELANGOR

கைவிடப்பட்ட மாடுகளை புதிய  பகுதிக்கு இடம் மாற்றும் பணி ஜூன் மாதம் மேற்கொள்ளப்படும்

ஷா ஆலம், மார்ச் 24- கைவிடப்பட்ட நிலையில் பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை கோல லங்காட், ஓலாக் லெம்பிட் பகுதிக்கு மறு இட மாற்றம் செய்யும் பணி வரும் ஜூன் மாதவாக்கில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமது தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படைத் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

கோல லங்காட், ஓலாக் லெம்பிட் மறு குடியேற்றத் திட்டப் பகுதியில் மின்சாரம் நீர் விநியோகத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு நான் தலைமை ஏற்றேன்.

இறைவன் அருளால் மாடுகளை இட மாற்றம் செய்யும் பணி குறைந்த பட்சம் ஜூன் மாதவாக்கில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் சுற்றித் திரியும் மற்றும் கைவிடப்பட்ட மாடுகளை பராமரிப்பதற்கு ஏற்ற இடத்தை மாநில அரசு அடையாளம் கண்டு வருவதாக இஸாம் மாநில சட்டமன்றத்தில் கடந்த 17 ஆம் தேதி கூறியிருந்தார்.

கைவிடப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக ஓலாக் லெம்பிட் பகுதியில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் அங்கு இரண்டாம் கட்ட நிர்மாணிப்பு பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :