ECONOMYNATIONAL

பொதுத்தேர்தல் முன்கூட்டிய நடத்தப்பட்டால் கெஅடிலான் கட்சித் தேர்தலை நடத்த மாற்று வழி- சைபுடின் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 28 – நாட்டின் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டால் வரும் மே மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் கெஅடிலான் கட்சித் தேர்தலை நடத்துவதனதற்கான மாற்று வழிகளை  கட்சித் தலைமைத்துவம் கொண்டுள்ளது.

கெஅடிலான் கட்சியின்  மத்திய நிர்வாக மன்றம் ஒன்றுகூடி கட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான புதிய முடிவுகளை எடுக்கும் என்று கெஅடிலான் கட்சியின்  பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

வரும் மே மாதம் கட்சித் தேர்தலை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்ட போது நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் சாத்தியம் உள்பட பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.  அத்தகைய சூழல் ஏற்படும் பட்சத்தில் நம்மிடம் ஏ,பி,சி என மாற்றுத் திட்டங்கள் உள்ளன. சூழலுக்கேற்ப நமது வியூகங்களை மாற்றிக் கொள்வோம் என்றார் அவர்.

நாட்டில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டால் கட்சியின் மத்திய நிர்வாக மன்றம் ஒன்றுகூடி தேர்தலை தொடர்வதா அல்லது ஒத்தி வைப்பதா என்று முடிவெடுக்கும். கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை நமக்கு அவகாசம் இருக்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்கு லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியைக் கருத்தில் கொண்டு கட்சி பலவீனங்களை களைவதில் முனைப்பு காட்டுவதோடு முழு தயார் நிலையிலும் இருப்பதாக சைபுடின் தெரிவித்தார்.


Pengarang :