ECONOMYNATIONAL

மைசெஜாத்ரா அரசுக்கு சொந்தமானது- எந்த நிறுவனத்திற்கும் அது விற்கப்படவில்லை- கைரி விளக்கம்

கோலாலம்பூர், மார்ச் 28 – மைசெஜாத்ரா செயலி அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பதோடு அது ஒரு போதும் எந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும் விற்கப்படவில்லை என்று  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி  அரசாங்கம் முடிவெடுத்ததைப் போல் நாட்டின் பொது சுகாதார மேலாண்மைக்கான முதன்மை உரிமையாளராக சுகாதார அமைச்சு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மைசெஜாத்ரா செயலி  ஆரம்பிக்கப்பட்டது முதல் அது சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் உள்ளது. சுகாதார அமைச்சு நிர்ணயித்தபடி  தரவு நிர்வாக செயல்முறைக்கு உட்பட்டு அனைத்து தரவு மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மைசெஜாத்ரா செயலியின் நிலை குறித்து போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்பட பல்வேறு தரப்பினர் எழுப்பி வரும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கைரி இந்த விளக்கத்தை வழங்கினார்.

மைசெஜாத்ரா செயலியை உருவாக்கிய கேபிஐசோப்ட் (ம) சென்.பெர்ஹாட்ட நிறுவனத்திற்கு KPISOFT (M) Sdn Bhd (KPISOFT) கடந்த 2020 மார்ச் 27 முதல் கடந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவில்லை என்றும் அவர் சொன்னார்.

சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் ஓராண்டிற்கு எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக அந்த செயலி  சேவையை வழங்க அந்நிறுவனம் முன்வந்தது.

அந்த இலவச சேவைக்கான காலம் முடிவுக்கு வந்தப் பின்னர் அந்நிறுவனத்தின்  தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் மைசெஜாத்ரா செயலியில் அது இதுவரை ஏற்படுத்திய மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தின் சேவையை தொடர அரசாங்கம் முடிவெடுத்தது என்று கைரி கூறினார்.


Pengarang :